இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள்

  1. ராமநாதபுரம் சுற்றுலா

    இராமநாத சுவாமி திருக்கோவில்

இராமநாதசுவாமி கோவில் தென்னிந்தியாவின் ஆன்மீக சுற்றுலா பட்டியலில் தவிர்க்க முடியாத கோயிலாகும். இது மதுரையிலிருந்து கிழக்கே 161 கி. மீ., தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் ராமேஸ்வரம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது நம்பிக்கை. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.

இக் கோவில் அற்புதமான அமைப்பு, நீண்ட தாழ்வாரங்கள், கலையுணர்வுடன் செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் உயர்ந்த 38 மீட்டர் கோபுரம் கொண்டது. இக்கோவிலின் கட்டிடப்பணி 12 ஆம் நூற்றாண்டில் சேதுபதி மறவரால் தொடங்கப்பட்டு பிரசித்தி பெற்ற மூன்றாவது பிரகாரமானது அவரது வாரிசுகளால் முடிக்கப்பட்டது. ஆசியாவின் மிக நீளமான பிரகாரமும், உலகின் மூன்றாவது பெரியதுமான இது, கிழக்கில் இருந்து மேற்காக 197 மீட்டரும் மற்றும் வடக்கு தெற்காக 133 மீட்டரும் கொண்டது. கி.பி.1897-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இக்கோவிலில் வழிபாடு செய்தார். இந்தியாவிலுள்ள 12 ஜோதி லிங்க வழிபாட்டுத் தலங்களுள் முக்கியமானதாகும். இங்கு சிவபெருமான் ஜோதிலிங்க வடிவில் வழிபடப்படுகிறார்.

கோவில் கோபுரத்திற்கு முன்னால் சுமார் 100 மீ. தொலைவில் உள்ள அமைதியான ஆழமற்ற கடல் பகுதியான அக்னி தீர்த்தம் மிகப்புனிதமாகக்கருதப்படுகிறது. இந்தபுனித நீராடுதல் பாவங்களை நீக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். மற்ற முக்கிய தீர்த்தங்களாகப்பக்தர்களால் கருதப்படுபவை கோவிலுக்குள்ளும் கோவிலைச்சுற்றியும் அமைந்துள்ளன. காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிசேகம் செய்து, காசியிலிருது கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.

இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்கள்  மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ஆடி அமாவாசை, தை அமாவாசை  மற்றும்  மகாளய அமாவாசை ஆகும்.

  1. பாம்பன் பாலம்

பாம்பன் பாலம் தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு ‘நடுவில் திறக்கும்’ பாலமாகும். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும் (முதலிடத்தில் பாந்திரா-வொர்லி கடற்பாலம்). இப்போது பாம்பன் தொடருந்துப் பாலம், பாம்பன் பேருந்துப் பாலம் என இரண்டாக அழைக்கப்பட்டாலும் பொதுவாக தொடருந்துப் பாலத்தையே பாம்பன் பாலம் எனக் குறிப்பிடுவர்.

 

பாம்பன் பாலத்தின் அலுவல் ரீதியான பெயர் அன்னை இந்திரா சாலை பாலம் என்பதாகும். இந்த பாலம் தான் இராமேஸ்வரத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே பாலமாகும். இந்த பாலம் தென்னக இரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாகவே கட்டப்பட்டுள்ளது. 1887-ம் ஆண்டு துவங்கப் பட்ட இந்த பாலம் 1912-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதை கட்டியவர்களின் கடின உழைப்புக்கு சான்றாகவும், உறுதியாகவும் காலத்தை கடந்து இந்த பாலம் நின்று கொண்டுள்ளது. இந்த பாலத்தின் தூக்கி மூடும் வசதியால் இந்த பாலத்திற்கடியில் கப்பல்களும் சென்று வர முடிகிறது.

  1. தனுஸ்கோடி

தனுஷ்கோடி தமிழ் நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள இடமாகும். இது பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது. இங்கு வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால் இதனைத் தனுஷ்கோடி என்றனர்(வில் = தனுஷ்).

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 123 பேரும் கொல்லப்பட்டனர்.[4] அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழக அரசு இந்த ஊரை வாழத் தகுதியற்றதாக அறிவித்தது. தற்போது புதிய தனுஷ்கோடி உருவாக்கப்படுகிறது.

புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டடங்களும் மட்டுமே. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீன் சுட்டுத் தருவது, சிப்பி, முத்துக்களால் ஆன மணி மாலைகளால் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டது. ரயில் தண்டவாளம், பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது. புயலினால் கோதண்டராமசுவாமி கோவில் தவிர முற்றிலும் அழிவிற்குள்ளாக்கப்ப்பட்டுள்ளது. இக்கோவில் இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. சாலை வழியாக இக்கோவிலை அடையலாம். இராவணனின் சகோதரனான விபீஷணன் இங்கு இராமபிரானிடம் சரணடைந்ததாக நம்பப்படுகிறது.

  1. முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அல்லது முனைவர் ஏபிஜே அப்துல் கலாம் என்று எல்லோராலும் அறியப்பட்ட இந்தியத்திருநாட்டின் 11 வது குடியரசுத்தலைவராக விளங்கிய இவர் இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். பின்னாளில், விஞ்ஞானியான இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இவரது பங்கு அளப்பரியது. இளைஞர்களின் வழிகாட்டியாகவும் பெரும் உந்து சக்தியாகவும் விளங்கிய கலாம் அவர்கள் ஷில்லாங்கில் ஜூலை மாதம் 27ஆம் திகதி ஏற்பட்ட அவரது  திடீர் மறைவுக்குப்பிறகு 2015 ஜூலை மாதம் 30ஆம் திகதி இராமேஸ்வரம் அருகில் பேய்க்கரும்பில் நல்லடக்கம் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில், அவரது  நினைவாக ஒரு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது . மணி மண்டபத்தின் உள்ளே அரிய புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும சில ஏவுகணைகளின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

05.தேவிபட்டினம் (நவபாஷாணம்)

கடற்கரை கிராமமான தேவிபட்டினம் நவபாஷாணம் எனவும் அழைக்கப்படுகிறது. இராமபிரான் நவக்கிரகங்களை இங்கு வழிபாடு செய்ததாக நம்பப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவிக்கு ஒரு கோவிலும் அருகில் உள்ளது. இந்துக்கள் முன்னோர்களுக்கான சடங்குகளை இங்கு செய்கிறார்கள்.

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பாஷாணங்கள் என்னவென்றால்..,சாதிலிங்கம், மனோசிலை,  காந்தம்,  காரம், கந்தகம், பூரம்,  வெள்ளை பாஷாணம்,  கௌரி பாஷாணம்,  தொட்டி பாஷாணம்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.

தேவிபட்டினம் இராமநாதபுரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து மிக அருகில் உள்ள இரயில் நிலையம் இராமநாதபுரம் ஆகும். மிக அருகில் இருக்கும் விமான நிலையம் மதுரை ஆகும்.

  1. திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில்

திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

இக்கோயிலில் மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் சன்னதிகளும், நடராஜர், சுயம்புலிங்கம், பைரவர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பாலபைரவர் உபசன்னதிகளும் மற்றும் கோயில் குளமும்  உள்ளன.  இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் காரணாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது. சித்திரை, மார்கழி மாதம் 8ம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்விழா, மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை) முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது.

இக்கோயில் ராமநாதபுரத்தில் இருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து மிக அருகில் உள்ள இரயில் நிலையம் இராமநாதபுரம் ஆகும். மிக அருகில் இருக்கும் விமான நிலையம் மதுரை ஆகும்.

 

Leave a Reply