தென்னிந்தியாவின் முக்கிய நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றான ஒகேனக்கல் காவிரி நதியில் அமைந்துள்ளது.தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியானது தர்மபுரி நகரி இருந்து 46 km தொலைவிலும், கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் இருந்து 180 km தொலைவிலும் இருக்கிறது. இது ‘இந்தியாவின் நயாகரா’ என்றும் வர்ணிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உருவாகும் காவிரி தர்மபுரி மாவட்டத்தின் ஒகேனக்கல் வழியாக தமிழகத்தில் நுழைந்து மேட்டூர் அணையை அடைகிறது.
ஒகேனக்கல் என்ற பெயர் இரண்டு கன்னட வார்த்தைகளில் இருந்து பிறந்தது.கன்னட மொழியில் ‘Hoge’ என்றால் புகை என்றும், ‘kal” என்றால் பாறை என்றும் அர்த்தமாகும். எனவே ஒகேனக்கல் என்றால் ‘புகையும் பாறை’ (smoking rocks) என்று பொருள்படும். நீர்வீழ்ச்சியானது பாறைகளின் மேல் விழும்போது கணிசமான அளவு ஆவியாதல் நிகழ்வதால் பாறை புகைவதை போன்ற ஒரு தோற்றம் உருவாகும் காரணத்தினால் தான் இவ்விடமானது ‘புகையும் பாறை’ என்று பொருள்படும் படி ‘ஒகேனக்கல்’ என்று அழைக்கப்படுகிறது.
மழைக்காலங்களில் காவிரி ஆற்று வெள்ளம் பொங்கி பிரவாகமெடுத்து ஓடும் அழகே தனி. ஆனால் வெள்ளம் அளவுக்கு அதிகமாக இருந்தால் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் படகு சவாரி செய்யவும் தடை விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே ஒகேனக்கல் செல்வதற்கான சிறந்த மாதம் என்பது நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்தது.
கோடை தொடங்குவதற்கு சற்று முன்னரே சென்றால் வெள்ளம் குறைவாக இருப்பதால் நீர்வீழ்ச்சியில் குளிப்பது மட்டுமல்லாது ஆற்று நீரிலும் உங்கள் குழந்தைகளும் குளிக்கலாம். பெண்கள் குளிப்பதற்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குளிப்பதற்கு முன்னர் ஆயில் மசாஜ் செய்து கொள்ளும் வசதியும் குறைவான விலையிலேயே கிடைக்கிறது.
ஆயில் மசாஜ் செய்து, நீர்வீழ்ச்சியில் ஒரு சூப்பர் குளியலை போட்டுவிட்டு கரையேறியதும், புதிதாக பிடிக்கப்பட்ட ஆற்று மீன்களை ஆற்றங்கரையிலேயே சமைத்து சுடச்சுட பரிமாறும் கடைகளில் தஞ்சம் புகுவது உற்சாகத்தை தரும் அனுபவமாக இருக்கும்.
ஆற்றின் மறுகரைக்கு சென்று வர தொங்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்றால் மலைகளையும் காவிரி ஆற்றையும் வெவ்வேறு கோணங்களில் ரசிக்க முடியும்.
ஆற்று வெள்ளம் மிதமாக இருக்கும் காலங்களில் ‘பரிசல்’ என்று அழைக்கப்படும் படகு சவாரி வசதி உள்ளது. மூங்கிலால் செய்யப்படும் இப்பரிசலின் அடிப்பகுதி நீர்புகாத வண்ணம் பிளாஸ்டிக் பூச்சு அல்லது தோலினால் ஆனது.வட்ட வடிவிலான இந்த பரிசலில் நீர்வீழ்ச்சிக்கு மிக அருகிலேயே பயணம் செய்வது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
ஒகேனக்கல் அருவி சுற்றுலா தளம் – சில தகவல்கள் :
உயரம் – 250m கடல் மட்டத்திலிருந்து
வெப்பநிலை – 27 ~ 37deg ( வெயில்காலம்) & 13~27 deg ( குளிர்காலம் )
உடை – காட்டன் உடைகள் ( வருடம் முழுவதற்கும் )
வெயில்காலம் -ஏப்ரல் முதல் ஜூன் வரை
குளிர்காலம் – டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
மழைக்காலம் – ஜூன் முதல் செப்டம்பர் வரை
பார்வையிட சிறந்த காலம் – அக்டோபர் முதல் மார்ச் வரை
விமான நிலையம் அருகில் – பெங்களூரு
இரயில்நிலையம் அருகில் – தர்மபுரி