கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களின் பட்டியல் மற்றும் பொழுது போக்கு இடங்கள்

கன்னியாகுமரி மாவட்டம்

திற்பரப்பு அருவி / நீர்வீழ்ச்சி

திற்பரப்பு அருவி / நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி
திற்பரப்பு அருவி / நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி

தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு என்னும் ஊா் அங்கு காணப்படும் நீா்வீழ்ச்சிக்குப் புகழ்பெற்றது. திற்பரப்பு அருவி நாகா்கோவிலிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த அருவி கோதையாறு நதியில் அமைந்துள்ளது. கோதையாறு திற்பரப்பில் அருவியாக கீழே பாய்கிறது. இது பேச்சிப்பாறை அணையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நீா் வீழ்ச்சி 300 அடி நீளமும் முற்றிலும் பாறைகளால் அமைந்த ஆற்றுப்படுகையும் கொண்டது. இந்த அருவி 50 அடி உயரம் கொண்டது. வருடத்தில் 7 மாதம் இந்த அருவி அதிக அளவு நீருடன் சீற்றத்துடன் காணப்படும். இந்த நீா் வீழ்ச்சியின் மேற்பரப்பில் 250 மீட்டா் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள திற்பரப்பு நீா் தேக்கத் திட்டமானது, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வயல்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது. இந்த நீா் வீழ்ச்சிக்கு அருகில் ஒரு நீச்சல் குளமும் பூங்காவும் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான இந்த திற்பரப்பு அருவிக்கு அருகிலேயே  படகு சவாரியும் சுற்றுலா செல்வோரின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் கால்மிதிப் படகு வசதியும் உள்ளது. ஆற்றின் இடதுபக்கக் கரையில் நீா்வீழ்ச்சிக்கும் நீா்த்தேக்கத்திற்கும் நடுவே மகாதேவா் கோவில் (சிவன் கோவில்) உள்ளது. இது பன்னிரெண்டு சிவாலயங்களுள் மூன்றாவது சிவ தலமாகும். இந்தக்  கோவிலில் சிவபெருமான் வீரபத்திரன் என்னும் உக்கிர வடிவில் உள்ளார். இந்தக் கோவிலில் 9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டியா் கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இந்த கோவில்  9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும். இதே நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளும் இந்தக் கோவிலில் காணப்படுகின்றன.

பார்வையிடும் நேரம் –  காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை. திற்பரப்பு நீா்வீழ்ச்சி கன்னியாகுமரி, நாகா்கோவில் மற்றும் திருவனந்தபுரம் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மிக அருகிலுள்ள இரயில் நிலையம்  மார்த்தாண்டம் மற்றும் நாகா்கோவில் ஆகும். இங்கிருந்து மிக அருகில் உள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் ஆகும். தங்குவதற்கு வசதியான ஹோட்டல்கள் நாகர்கோயில் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ளது.

 

விவேகானந்தர் மண்டபம்

விவேகானந்தர் மண்டபம் கன்னியாகுமரி

தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில், சுவாமி  விவேகானந்தா் ஞானமுக்தி அடைந்ததை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்டதே விவேகானந்தா் நினைவு மண்டபம் ஆகும்.  வாவத்துறையிலிருந்து 500 மீ. தொலைவில் அமைந்துள்ள இரு பாறைகளில், பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டது இந்த மண்டபம் ஆகும்.  திரு.ஏக்நாத் ரானடே என்பவரின் இடைவிடாத முயற்சியால் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்த மண்டபம் கட்டப்பட்டது. இது 1970 ம் ஆண்டு நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.  இங்கு பொது மக்கள் தியானிப்பதற்காக ஒரு தியான மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் இந்தியாவின் பல்வேறு மாநில கட்டிடக் கலையினை ஒருங்கிணைத்துக் கட்டப்பட்டது. இங்கு விவேகானந்தரின் திருஉருவச்சிலை அமைந்துள்ளது. இது இரு பிரிவாக உள்ளது. – விவேகானந்தா் மண்டபம்,  ஸ்ரீபாத மண்டபம். நேரம் – காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.விவேகானந்தபுரம் – 100 ஏக்கா்  நிலப் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விசாலமான வளாகம் விவேகானந்த கேந்திரத்தின் தலைமையிடமாகும். இங்கு ஒரே நேரத்தில் 1000 போ் தங்கும் இட வசதி உண்டு. விவேகானந்தரின் புகைப்பட காட்சித் தொகுப்பும் நூலகமும் இங்கு உள்ளது.  தொலைபேசி – 91 – (0)4652 – 246250

ஒவ்வொரு நாளும் விடியற்காலை வேளைகளில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வீவேகானந்தர் பாறை அருகே உள்ள ‘sunrise view point’ -ல் கூடுவார்கள். அங்கிருந்து சூரிய உதயத்தை காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த மண்டபம் திருவனந்தபுரதிலிருந்து 90 கி மி தொலைவிலும் நாகர்கோயிலிருந்து 19 கி மி  தொலைவிலும்  உள்ளது. இங்கிருந்து மிக அருகில் உள்ள இரயில் நிலையம் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயில் ஆகும். மிக அருகில் உள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் ஆகும்.

திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி
திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி

‘உலகப் பொது மறை’ என்று வர்ணிக்கப்படும் திருக்குறளைத் தந்து அழியா புகழ்பெற்ற திருவள்ளுவா் என்னும் தமிழ் புலவரின் 133 அடி உயர சிலை முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில், கடலின் உள்ளே விவேகானந்தா் மண்டபம் இருக்கும் பாறைக்கு அருகே உள்ள பாறையில் அமைந்துள்ளது. 95 அடி உயர திருவள்ளுவா் சிலை திருக்குறளின் 38 அதிகாரங்களைக் கொண்ட நல்லொழுக்கம் என்னும் பாடல் தொகுப்பை குறிக்கும் வகையில் 38 அடி உயர பீடத்தில் அமைந்துள்ளது. நல்லொழுக்கமே மனிதனின் செல்வ செழிப்பிற்கும் இன்பத்திற்கும் மூலகாரணம் என்பதை விளக்கும் வகையில் இந்த 133 அதிகாரங்களைக் குறிக்கும் 133 அடி உயர பீடம் மற்றும் சிலை திகழ்கிறது. 7000 டன் எடைக் கொண்ட இந்த திருவள்ளுவா் சிலை இடுப்பு பகுதியில் ஒரு சிறிய வளைவுடன் காணப்படுகிறது. இதை வடிவமைத்தவா் டாக்டா்.வி. கணபதி ஸ்தபதி. இந்த மூன்று அடுக்கு ஆதார பீடத்தை சுற்றி கலை வேலைப்பாடு மிக்க 38 அடி உயரம் உள்ள அலங்கார மண்டபம் உள்ளது. இந்த அலங்கார மண்டபத்தை சுற்றி 10 யானைகள் 8 திசைகளை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவள்ளவா் சிலை ஜனவரி 1, 2000ம் ஆண்டு திறக்கப்பட்டது. பார்வையிடும் நேரம் – காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை. இந்த திருவள்ளுவர் சிலையானது திருவனந்தபுரதிலிருந்து 90 கி மி தொலைவிலும் நாகர்கோயிலிருந்து 19 கி மி  தொலைவிலும்  உள்ளது. இங்கிருந்து மிக அருகில் உள்ள இரயில் நிலையம் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயில் ஆகும். மிக அருகில் உள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் ஆகும்.

 

பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள வேலி மலையில் அமைந்திருக்கும்  இந்த அரண்மனை கி.பி.1592 – 1609 ல் திருவாங்கூரை ஆண்ட இறவி வா்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601 ல் கட்டப்பட்டது. திருவாங்கூா் மன்னா்களின் ராஜிய உறைவிடமாக திகழ்ந்த இந்த அரண்மனை சுமார் 185 ஏக்கர் பரப்பளவு பறந்து விரிந்துள்ளது. கி.பி. 1795 வரை பத்மநாபபுரம் திருவாங்கூரின் தலைநகரமாக திகழ்ந்தது. இது கேரளாவின் தலைநகா் திருவனந்தபுரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவிலும், தக்கலையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 ன்படி இந்த அரண்மனை கேரள அரசின் ஆளுகைக்கு மாறியது. இந்த அரண்மனை கேரள தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது. நவீன திருவாங்கூரை வடிவமைத்த மார்த்தாண்ட வா்மா, மரத்தாலான நவராத்திரி மண்டபத்தை கற்களால் மாற்றி அமைத்தார். 1744 ல் பெருமாள் கொட்டாரம் என்னும் 4 அடுக்கு உப்பரிகை மாளிகையையும் புதுப்பித்து வடிவமைத்தார். இம்மாளிகை 1940 ல் பல்வேறு பகுதிகளிலும் பாரம்பரிய உத்திகளின்படி புதுப்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த அரண்மனையில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அதில் பாரம்பரிய பொருட்கள் கல்வெட்டுக்கள், செப்புத் தகடுகள், கல் மற்றும் மரத்தால் ஆன சிற்பங்கள், நாணயங்கள் மற்றும் படைக்கலன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1994ல் இந்த அருங்காட்சியகம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

 

இந்த அரண்மனையின் முக்கிய பகுதிகள் – பூமுகம்(நுழைவு மண்டபம்), மந்திர சாலை (அவை மண்டபம்), மணிமேடை(மணிக்கூண்டு), நாடக சாலை (கதகளி நடனம் ஆடும் இடம்), ஊத்துபுரம் (உணவுக் கூடம்), தாய்க் கொட்டாரம், உப்பரிகை மாளிகை (அடுக்கு மாளிகை), கண்ணாடி தளம், நவராத்திரி மண்டபம், இந்திர விலாசம் மற்றும் சந்திர விலாசம். தொலைபேசி – 04651 – 250255. விடுமுறை : திங்கள் கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை தினங்கள். நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.

பத்மநாபபுரம் அரண்மனை  திருவனந்தபுரதிலிருந்து 70 கி மி தொலைவிலும் நாகர்கோயிலிருந்து 15 கி மி தொலைவிலும் உள்ளது.இங்கிருந்து மிக அருகில் உள்ள ரயில் நிலையம் நாகர்கோயில் ஆகும்.மிக அருகில் உள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் ஆகும். அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடையலாம். தங்குவதற்கு வசதியான ஹோட்டல்கள் நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்தில் இருக்கிறது.

  கன்னியாகுமரி குமரி அம்மன் கோவில்

கன்னியாகுமரி குமரி அம்மன் கோவில்
கன்னியாகுமரி குமரி அம்மன் கோவில்

கன்னியாகுமரி என்ற பெயர் வரக் காரணம் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற குமரி அம்மனாலேயே ஆகும். அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் இந்தியப்பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகிய  முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பரசுராமனால் கட்டப்பட்டு பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்டது ஆகும். இங்கு பகவதி அம்மன் கன்னியாக நின்று பாணாசுரன் என்னும் அசுரனை நவராத்திரி இறுதி நாளான விஜயதசமி அன்று வதம் செய்தார். இந்தக் கோவில் பார்வதி தேவி கன்னியாக நின்று தவம் புரிந்த கோலத்திற்கு அா்ப்பணிக்கப்பட்டது ஆகும். இங்கு பார்வதி தேவி இந்தியாவின் தெற்குகடற்கரையை பாதுகாப்பது போல தன் வலது கையில் பூமாலையுடன் கிழக்கு நோக்கி தவம் புரியும் கோலத்தில் நிற்கிறாள். பார்வதி தேவியின் சிலை பரசுராம முனிவரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. குமரி அம்மனின் மூக்குத்தியிலிருந்து வரும் ஒளியானது கலங்கரை விளக்கத்தின் ஒளியை ஒத்திருப்பதாக வர்ணிக்கப்படுகிறது.   இந்தக் கோவில் கடற்கரையில் அமைந்திருந்தாலும் இங்குள்ள கிணற்று நீா் உப்பாக இல்லாமல் சுவையாக இருக்கும். மே –ஜீன் மாதங்களில் தோ் திருவிழாவும் செப்டம்பா் – அக்டோபா் மாதங்களில் நடைபெறும் 9 நாட்கள் நவராத்திரி திருவிழாவும் இந்தக் கோவிலில் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது.  நேரம் – காலை 4.30 மணி முதல் மதியம் 12.30  மணிவரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை, தொலைபேசி – 04652 -246223. குமரி அம்மன் கோவில், நாகா்கோவிலிலிருந்து 21 கி.மீ. தொலைவில்  உள்ளது. இங்கிருந்து மிக அருகிலுள்ள இரயில் நிலையம் – கன்னியாகுமரி.

 மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கன்னியாகுமரி
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கன்னியாகுமரி

இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கன்னியாகுமரியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும். கேரள அமைப்பினை அடிப்படையாக கொண்டு எளிய முறையில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு பெண்களின் சபரிமலை என்றும் பெயா் உண்டு. ஆண்டுதோறும்  மாசிமாத(பிப்ரவரி – மார்ச்) கடைசி செவ்வாய் கிழமையில் கொண்டாடப்படும் மண்டைக்காடு கொடை என்னும் 10 நாள் திருவிழா இந்தக் கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

செயின்ட் சேவியர் தேவாலயம்

செயின்ட் சேவியர் தேவாலயம் கன்னியாகுமரி
செயின்ட் சேவியர் தேவாலயம் கன்னியாகுமரி

தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒன்றான இந்த தேவாலயம் உலகிலேயே புனித பிரான்சிஸ் சேவியருக்கு அா்ப்பணிக்கப்பட்ட முதல் தேவாலயம் ஆகும். இது 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு 1865 ம் ஆண்டு பெரிதுபடுத்தி அதன்பின் 1955 ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு வருடந்தோறும் நவம்பா் 24 லிருந்து

டிசம்பா் 3  வரை  10 நாட்கள் திருவிழா நடைபெறும். டிசம்பா் 1,2,3 ஆம் தேதிகளில் நடைபெறும் தோ் திருவிழா காணக் கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த தேவாலயம் நாகா்கோவிலின் புறநகா் பகுதியான கோட்டாரில் அமைந்துள்ளது. இது மதுரையில் இருந்து  240 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

 

மாத்தூர் தொங்கு / தொட்டி பாலம்

மாத்தூர் தொட்டி தொங்கு பாலம் கன்னியாகுமரி
மாத்தூர் தொட்டி தொங்கு பாலம் கன்னியாகுமரி

மாத்தூர் தொட்டிப் பாலம் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமான  இது, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பெயர்பெற்ற சுற்றுலாத்தலமாகும். தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும், இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த தொட்டிப்பாலம் வறட்சியை தீர்ப்பதற்காக 1962 ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்டு  1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது.இதற்கான நீர் பேச்சிபாறை மற்றும் சிட்டார் அணைகளிலிருந்து கொடையார் கால்வாய் வழியாக கொண்டுவரப்படுகிறது.இந்த பாலத்தின் கீழ் பரளியாறு என்ற சிற்றாறு பாய்கிறது.

தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமும், ஏழு அடி உயரமும் கொண்ட தொட்டிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சி மன்றப் பகுதியில் மாத்தூர் தொட்டிப் பாலம் அமைந்துள்ளது. இது திருவட்டாரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் உள்ளது. இங்கிருந்து மிக அருகிலான இரயில் நிலையம் குழித்துறை 15 கி.மீ. தொலைவிலும், மிக அருகிலான விமான நிலையம்  திருவனந்தபுரம் 70 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது.

Leave a Reply