குடியாத்தம் சேம்பள்ளியில் உள்ள தீப்பாஞ்சி அம்மன் குலதெய்வ கோவில்

தீப்பாஞ்சி அம்மன் குலதெய்வ கோவில்

குடியாத்தம் அடுத்துள்ள சேம்பள்ளியில் அமைந்துள்ளது சக்தி வாய்ந்த தீப்பாஞ்சி அம்மன் திருக்கோவில்.  இந்த கோவில் ஏழு தலைமுறைகளை தாண்டி, அகமுடி முதலியார் குடும்பத்தின் ஒரு பிரிவினரால் குலதெய்வமாக வழிபடப்படுகிறது. இவர்களின் வம்சாவழியினர் இந்த கோவிலை புதுப்பித்து தீப்பாஞ்சி அம்மனுக்கு சிலை வைத்து , ஆலயம் கட்டி, வழி அமைத்து, மண்டபம் கட்டி சிறப்பு செய்துள்ளனர்.

தீப்பாஞ்சி அம்மன் ஸ்தல புராணம்

இந்த வம்சாவழியினரின் முன்னோராய் இருந்த அம்மன், தீப்பிழம்பாய் கருகி தெய்வமாய் அவதரித்த இடமிது, அன்று முதல் இந்த வம்சாவழியினரால் தீப்பாஞ்சி அம்மன் என்று பக்தியாய் அழைக்கப்படுகிறார். இந்த வம்சாவழியினரை அரணாய் இருந்து அம்மன் காப்பாற்றுவதால், மிகவும் சக்திவாய்ந்த அம்மனாக வம்சாவழியினரும் ஊர்மக்களும் கருதுகின்றனர்.

தீப்பாஞ்சி அம்மன் கோவில் சன்னிதான புகைப்படங்கள்

தீப்பாஞ்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் போக்குவரத்து வழிகள்

இந்த கோவில், வேலூர் மாநகரிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலும், குடியாத்தம் நகரிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுலபமாக சாலை வழியாக இந்த கோவிலை வந்தடையலாம். இந்த தீப்பாஞ்சி அம்மனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் பசுமையாக உள்ளபடியால், பிரயாண வழித்தடங்கள் அனைத்தும் மனதிற்கு குளிர்ச்சியும் கண்களுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

தீப்பாஞ்சி அம்மன் ஆலய வசதிகள்

தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் சற்று நாட்களுக்கு முன் மகா கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது, இந்த அம்மனை குலதெய்வமாக கருதும் வம்சாவழியினர் நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்று தீப்பாஞ்சி அம்மன் அருள் பெற்றனர் மேலும் மண்டல பூஜைகளும் விசேஷமாக நடைபெற்று வருகின்றன. மேலும் அவ்வப்போது சிறப்பு அபிஷேகங்களும், வம்சா வழியினரின் வேண்டுதல்களும், நேர்த்திக்கடனும் நிறைவேற்றப்படுகின்றன. வம்சாவழியினர் தங்களின் வாரிசு பிள்ளைகளுக்கு மொட்டையடடித்து, காதணி அணிவிக்கும் சுப நிகழ்ச்சிகளும் ஆலயத்தில் சிறப்புற நடைபெறுகிறது. இதற்கென சமீபத்தில் மண்டபம் கட்டி அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த தீப்பாஞ்சி அம்மனை தரிசித்து, அம்மனின் அருளை பெறுவோமாக…

Leave a Reply