திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடங்கள்

தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் ஒன்று  திருநெல்வேலி. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து சுமார் 630 கிமீ தொலைவில் அமைந்துள்ள இம்மாவட்டம் 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை தாங்கி நிற்கிறது. பாண்டிய மன்னர்களின் காலத்தில் ‘தென்பாண்டியநாடு’என்றும், சோழ மன்னர்களின் காலத்தில் ‘முடிகொண்ட சோழமண்டலம்’ என்றும் அழைக்கப்பட்ட இந்நிலப்பரப்பு மதுரை நாயக்கர்களின் காலத்தில் ‘திருநெல்வேலி சீமை’ என்று அறியப்பட்டது. திருநெல்வேலி  மாவட்டம், மலைகள் ( மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ), சமவெளிகள் மற்றும் மணற்பரப்பு என்று கலவையான நில அமைப்பினை கொண்டுள்ளது. பண்டைய தமிழர்களால் குறிப்பிடப்படும் ஐவகை நிலங்களான குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐந்து வகை நிலங்களுமே அமையப்பெற்ற ஒரே மாவட்டம் தமிழகத்தில் திருநெல்வேலி மட்டுமே என்பது இதன் தனிச்சிறப்பு. தாமிரபரணி மற்றும் மணிமுத்தாறு உட்பட பல ஆறுகள் இம்மாவட்டத்தை செழிப்பாக்குகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் பின்வருமாறு.

குற்றாலம் திருநெல்வேலி மாவட்ட சுற்றுலா

குற்றாலம்

தென்னிந்தியாவின் மிக முக்கியமான அருவிகளில் ஒன்றான குற்றால அருவிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகின்றன.இந்த மலையில் இருந்து தான் சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகள் உருவாகின்றன. குற்றாலத்தில் மொத்தம் 9 அருவிகள் அமைந்துள்ளன. 1.பேரருவி, 2.ஐந்தருவி, 3.சிற்றருவி, 4.பாலருவி, 5.புலியருவி, 6.பழத்தோட்டஅருவி, 7.சென்பகாதேவியருவி, 8.பழையகுற்றால அருவி, 9.தேனருவி. இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரலை வெகு தொலைவில் இருந்தே உணர முடியும். தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவி ஆர்ப்பரிக்க ஆரம்பித்துவிடும். சுற்றுலா பயணிகள் வந்து தங்குவதற்கு வசதியாக ஏராளமான ஹோட்டல் வசதி உள்ளது. குறைந்த கட்டணம் முதல் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த ஹோட்டல்களை புக் செய்து கொண்டு உங்கள் விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க குற்றாலம் சிறந்த தேர்வாக இருக்கும்.

 

அருகில் உள்ள நகரங்கள்:

தென்காசி – 8 கிமீ

திருநெல்வேலி – 55 கிமீ

செங்கோட்டை – 5 கிமீ

கன்னியாகுமரி -137  கிமீ

திருவனந்தபுரம் – 112 கிமீ

மதுரை – 160 கிமீ

விமான நிலையம் அருகில் – தூத்துக்குடி 100 கிமீ

இரயில் நிலையம் அருகில் – தென்காசி மற்றும் செங்கோட்டை.

சுற்றுலா காலம் – ஜூன் முதல் ஆகஸ்ட் வரை

நெல்லையப்பர் கோவில்

நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி மாவட்ட சுற்றுலா

ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தெற்கு வடக்காக  756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக திகழ்கிறது. தேவார பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களுள் முக்கியமானது இந்த நெல்லையப்பர் ஆலயம். இத்தலத்தை பற்றிய குறிப்புகள் அடங்கிய  நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும்.  தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன.

களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம்

களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் - திருநெல்வேலி மாவட்ட சுற்றுலா

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் என்பது தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இது  இந்தியாவின் 17-ஆவது புலிகள் காப்பகமாகும். 1988 ம் ஆண்டு களக்காடு புலிகள் சரணாலயமும், முண்டந்துறை புலிகள் சரணாலயமும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த காப்பகம் உருவாக்கப்பட்டது.பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இங்கு புலிகள் மட்டுமல்லாது  சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன. இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து 56 கிமீ தொலைவிலும், குற்றாலத்திலிருந்து 75 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் நெல்லை-தென்காசி ரயில் பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம் 6 கிமீ தொலைவில் உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கான பருவ காலம் செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரை ஆகும்.

கூந்தன்குளம் பறவைகள் காப்பகம்

கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் திருநெல்வேலி மாவட்ட சுற்றுலா

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்குநேரி வட்டத்தில் கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் அமைந்துள்ளது. 1994-ம் ஆண்டு பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியான இதன் பரப்பு 129.33 ச. கிமீ ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து 33 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 43 இனத்தை சேர்ந்த 10,௦௦௦க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகின்றன. அதிலும் பூநாரைகளின் வரவு அதிகமாகவே இருக்கும். அதிகபட்சமாக ஒரு ஆண்டில் 1 லட்சம் பறவைகள் வரை வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதியில் கூந்தன் குளம் வரத் தொடங்கும் பறவைகள் ஏப்ரல், மே மாத வாக்கில் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிச் செல்கின்றன. பறவைகளைக் காண வருகை தர ஜனவரி, பிப்ரவரி ஏற்ற மாதங்களாகும்.

கிருஷ்ணாபுரம் கோவில்

கிருஷ்ணாபுரம் கோவில் திருநெல்வேலி மாவட்ட சுற்றுலா

திருநெல்வேலி மாவட்டத்தில்  கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள வெங்கடாசலபதி (விஷ்ணு ) கோவில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவில் திராவிடக் கட்டிடக்கலையை மையமாக வைத்து கட்டப்பட்டதாகும். இந்த கோவிலின் புண்ணிய ஸ்தலங்களைச் சுற்றி கிரானைட்டினால் செய்யப்பட்ட சுற்றுச்சுவர் இருக்கிறது.கோவிலின் நுழைவாயிலில் ஒரு ஐந்தடுக்கு ராஜகோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோவில் 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட அரசர்களும் நாயக் அரசர்களும் சேர்ந்து கட்டியிருக்கிறார்கள். இந்த கோவிலில் மார்கழி மாதத்தில் நடைபெறும் பத்து நாள் திருவிழா மிகவும் ப்ரசித்திபெற்றது.

சங்கர நாராயண ஸ்வாமி கோவில்

சங்கர நாராயண ஸ்வாமி கோவில் திருநெல்வேலி மாவட்ட சுற்றுலா

சங்கரன்கோவில் மதுரையிலிருந்து 120 கிமீ தொலைவிலும், ராஜபாளையத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 56 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. சங்கரநாராயணன் கோவிலின் ராஜ கோபுரம் 9 அடுக்குகளை கொண்டதாகும். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.”தபஸ்’ என்றால் “தவம்’ அல்லது “காட்சி’ எனப்பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாளாகும். இந்த விழா, 12 நாட்கள் நடக்கும்.

மாஞ்சோலை நீர்வீழ்ச்சி

மாஞ்சோலை நீர்வீழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட சுற்றுலா

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள மாஞ்சோலை குன்றுகள் கடல் மட்டத்திலிருந்து 1020 முதல்  1500 மீட்டர் வரையிலான உயரம் கொண்டவையாகும். இவை களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு அமைந்துள்ள மாஞ்சோலை நீர்வீழ்ச்சி/ அருவியானது சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதாக உள்ளது. சுற்றியுள்ள காடுகளும் தேயிலைத் தோட்டங்களும் ரம்மியமான அனுபவத்தை தரக்கூடியதாகும்.

பொட்டல்புதூர் தர்கா

பொட்டல்புதூர் தர்கா திருநெல்வேலி மாவட்ட சுற்றுலா

திருநெல்வேலியில் உள்ள பொட்டல்புதூரில் அமைந்துள்ள இந்த தர்கா 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்துக்களின் கோவிலை ஒத்த கட்டமைப்பை கொண்டுள்ளதே இதன் தனிச்சிறப்பாகும். இதனாலேயே இந்த தர்கா முஸ்லிம்கள் மட்டுமல்லாது இந்துக்கள் மற்றும் கிறித்துவர்களையும் கவருவதாக உள்ளது. மே மாதங்களில் நடைபெறும் காந்தூரி விழாவின் போது இந்த தர்காவில் தயாரிக்கப்படும் சந்தன பேஸ்ட் ராவணசமுத்திரத்தில் உள்ள இந்து கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் இங்கேயே கொண்டுவரப்படுகிறது. இது போன்ற காரணங்களால் இந்து முஸ்லீம் மத நல்லிணக்கத்திற்கான சூழல் உருவாகிறது. பொட்டல்புதூர் தர்காவானது நாகூர் தர்காவிற்கு இணையான புனிதத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.

மாவட்ட அறிவியல் மையம்

1987 ல் திறக்கப்பட்ட இந்த மாவட்ட அறிவியல் மையமானது பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் கூறுகளை கொண்டுசெல்லும் நோக்கம் கொண்டது. இந்த மையமானது பல்வேறு பயிற்சி வகுப்புகள், கிராமப்புற பகுதிகளுக்கான அறிவியல் கேம்ப்கள், பயிற்சி பட்டறைகள் மற்றும் விடுமுறைக்கால வகுப்புகளையும் நடத்துகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அறிவியல் ஆர்வத்தினை தூண்டும் இந்த மாவட்ட அறிவியல் மையத்தை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ 10 மற்றும் மாணவர்களுக்கு  ரூ 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Leave a Reply