திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமானால் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது தொன்று தொட்டே நம் மக்களிடையே இருந்தே வருகிறது. பண்டைய காலத்தில் பல்வேறு பொருத்தங்கள் (20 பொருத்தங்கள்) பார்த்த நிலையில் இன்றைய காலகட்டத்தில் பத்து பொருத்தங்கள் மட்டும் பார்க்கப்படுகிறது.
தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி,வசியம், ரஜ்ஜூ, வேதை ஆகியவை 10 பொருத்தங்களாக குறிப்பிடப்படுகின்றன. 10க்கு 8 பொருத்தம் சரியா இருக்கு, 7 பொருந்தி வந்திருக்கு என்று கூறுவார்கள். ஆனால் முக்கியமான பொருத்தங்கள் சரியாக வராவிட்டால் திருமணம் செய்து வைப்பது சரியாக வராது.
முக்கியமாக தவிர்க்கக் கூடாத பொருத்தம் இரண்டு உண்டு. ஒன்று யோனிப்பொருத்தம் மற்றொன்று ராஜ்ஜூப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லை என்றாலும் திருமணம் செய்யக்கூடாது. எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம் ஆகும்.
1. தினப் பொருத்தம்
ஓர் பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து ஆணின் ஜென்ம நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது, 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24 ஆக அதன் எண்ணிக்கை இருந்தால், தினப்பொருத்தம் உள்ளது. இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். இந்த பொருத்தம் இருந்தால்தான் தம்பதிகள் மனம் ஒத்து வாழ்வார்கள். ஆண், பெண் இருவரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் இதன் மூலம் கணிக்கபடுகிறது.
2. கணப் பொருத்தம்
ஜோதிட சாஸ்திரத்தில் நட்சத்திரங்களை மூன்று கணங்களாக பிரிக்கிறார்கள். அவை முறையயே தேவ கணம், மானுஷ கணம், மற்றும் ராக்ஷஸ கணம் ஆகும். வாழ்வில் மங்கலங்கள் பெருக இந்த கணப் பொருத்தம் மிகவும் அவசியம். மணமகள், மணமகன் இருவரின் நட்சத்திரங்களும் தேவ கணமாக இருந்தால், கணப்பொருத்தம் உண்டு. ஒருவேளை இருவரின் நட்சத்திரங்களும் மனித கணமாக இருந்தாலும், கணப்பொருத்தம் உண்டு. ஆண், பெண் இருவரின் நட்சத்திரங்களும் ராக்ஷஸ கணமாக இருந்தால் கணப்பொருத்தம் கிடையாது. ஒன்று ராக்ஷஸ கணமாக இருந்து மற்றொன்று மனித மற்றும் தேவ கனமாக இருந்தாலும் இந்த பொருத்தம் கிடையாது. இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு.
3. மகேந்திரப் பொருத்தம்
பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக அந்த எண்ணிக்கை இருந்தால் மகேந்திரப் பொருத்தம் உள்ளது என பொருள். இந்தப் பொருத்தம் இருந்தால் தான் குழந்தை பாக்கியம், செல்வ விருத்தி போன்றவை உண்டாகும். மகேந்திரப் பொருத்தமானது புத்திர பாக்கியத்தை குறிப்பதாகும்.
4. ஸ்த்ரீ தீர்க்க பொருத்தம்
பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்திலிருந்து ஆணின் ஜென்ம நட்சத்திரம் வரை எண்ணும்போது 13-க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் உள்ளது என பொருள். இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் தங்கும். வளமான குடும்ப வாழ்க்கைக்கு ஸ்த்ரீ தீர்க்க பொருத்தம் மிகவும் அவசியம்.
5. யோனி பொருத்தம்
இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இடையே தாம்பத்தியம் இனிக்கும். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு விலங்கு குறிக்கப்படுகிறது. இதில் ஒன்றுக்கு ஒன்று பகை இல்லாத விலங்கினங்களைச் சேர்க்க வேண்டும். இந்த பொருத்தம் இல்லாவிட்டால் தாம்பத்திய வாழ்க்கை கசந்து விடும். இல்லற இன்பம் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.
6. ராசிப் பொருத்தம்
இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். இது பொதுவாக பெண்ணின் ராசியிலிருந்து பிள்ளையின் ராசி எண்ணிக்கையில் 6க்கு அதிகமாக இருக்க வேண்டும். ஒன்பதுக்கு மேற்பட்டால் அதி பொருத்தம் என்பார்கள். ஆனால் எண்ணிக்கை எட்டாக இருக்க கூடாது. வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க இந்த பொருத்தம் அவசியம் தேவை.
7. ராசி அதிபதிப் பொருத்தம்
ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதி யார் என்பதைப் பார்த்து கொள்ள வேண்டும். ராகு, கேது இல்லாமல் மீதியுள்ள 7 கிரகங்களும், 12 ராசிகளுக்கும் அதிபதிகளாகத் திகழ்கின்றனர். இந்த கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு, சமநிலை, பகை என்னும் மூன்று நிலைகளில் இருப்பார்கள். ஆணின் ராசி அதிபதியும் பெண்ணின் ராசி அதிபதியும் நட்பு அல்லது சம நிலை என்னும் அளவில் அவர்களின் உறவு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும்.
8. வசியப் பொருத்தம்இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். இந்த பொருத்தம் இருந்தால்தான் ஆண், பெண் இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வார்கள்.
9. ரஜ்ஜுப் பொருத்தம்இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு ரஜ்ஜு உண்டு. இதை கயிறு பொருத்தம் என்றும் கூறுவார்கள். ரஜ்ஜு ஐந்து வகைப்படும். அவை, சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, நாபி ரஜ்ஜு, தொடை ரஜ்ஜு, பாத ரஜ்ஜு . ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருக்கக்கூடாது. எனவே, பொருத்தம் பார்க்கும்போது இது முக்கிய இடத்தை பெறுகிறது.
10. வேதை பொருத்தம்இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும். வேதை என்றால் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று பொருள். இதுவும் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டிய பொருத்தமாகும். எந்த நட்சத்திரத்துக்கு எந்த நட்சத்திரம் வேதை என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப மணமுடிக்க வேண்டும்..தம்பதியர் வாழ்வில் இன்பம், துன்பம் எந்த அளவில் இருக்கும் என்பது இந்த பொருத்தத்தை வைத்து முடிவு செய்யப்படுகிறது.
இதை தாண்டி ஜாதகத்தில் தோஷங்கள் ஏதாவது உள்ளனவா என்பதை பார்க்க வேண்டும்.
குறிப்பாக செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், புனர்பூ தோஷம், மாங்கல்ய தோஷம், ஷஷ்டாஷ்டக தோஷம், துவி துவாதச தோஷம் ஆகியவை உள்ளனவா என கவனிக்க வேண்டும்.
ஆண் மற்றும் பெண் இருவரது ஜாதகத்திலும் தனித் தனியாக குடும்ப அமைப்பு, பிள்ளை பேறுக்கான வாய்ப்பு, உடல் உறவு வாய்ப்பு, ஆயுள் நிலை ஆகியவை குறித்தும் பார்க்க வேண்டும்.