தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள்

திருச்செந்தூர் சுற்றுலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் சுப்ரமணிய கோவில். கடல் பகுதிக்கு அருகில் கடல் மட்டத்தை விட தாழ்வாக இருக்கும் ஒரே கோவில் என்ற பெருமை திருச்செந்தூருக்கு உண்டு. கடல் அருகே இருந்தும் நூற்றாண்டுகளை தாண்டியும், உப்பு அரிப்பால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இதன் கோபுரங்கள் கம்பீரமாக காட்சியளிப்பது கூடுதல் சிறப்பு. இந்த கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் மற்றும் விஐபி.,க்களின் வசதிக்காக கட்டண அடிப்படையில் தரிசனங்களும் நடைபெறுகிறது. இங்கு தினமும் 9 கால பூஜைகள் நடந்து வருகிறது.

150 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இத்திருக்கோவில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

வெளி மான் காப்பகம் –  வல்லநாடு

தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வல்லநாடு வெளிமான் காப்பகம் ஒரு காட்டு விலங்கு உய்விடம் ஆகும். சுமார் 16 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த காப்பகம் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அருகி வரும் மான் இனமான  வெளிமான்களை  காப்பதற்காக அமைக்கப்பட்டதாகும். இந்த வெளிமான்களுக்கு புல்வாய், திருகுமான் மற்றும் முருகுமான் என்று பல்வேறு தமிழ்ப்பெயர்கள் உள்ளன. இந்திய துணைக் கண்டத்தில் தென்கோடியில் அமைந்திருக்கும் புல்வாயின் இயற்கை உயிர்த்தொகை இக்காப்பகத்தில் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

புல்வாய் (Blackbuck) என்பது இந்தியத் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும். இதில் ஆண் மான் இரலை என்றும் பெண் மான் கலை என்றும் அழைக்கப்படுகின்றது. இம்மான்கள் அகன்ற சம தரை வெளிகளில் பெருந்திரள்களாக குடியிருக்கும் தன்மை உடையன. இதனால் புலி சிறுத்தை உள்ளிட்ட வேட்டையாடும் விலங்குகளை தூரத்தில் வரும்பொழுதே கண்டுகொள்ள முடியும். இருப்பினும் இம்மான்களை  மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றதால் இப்பொழுது இவற்றின் தொகை குறைந்துவிட்டது; இப்பொழுது பெருந்திரள்களைக் காண்பது மிகவும் அரிது. இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகை மானினம் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணப்படுகின்றது. அத்துடன் அர்ஜெண்டினாவின் சில பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாகச் செல்லும் விலங்கு புல்வாய் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மணிக்கு சுமார் 64-96 கிமீ (40-60 மைல்) வேகத்தில் பாய்ந்து செல்லும். இந்த காப்பகத்தில் திருகு மான்களை தவிர இன்னும் பல புள்ளி மான் இனங்களும், காட்டுப்பூனைகள், பல்வேறு முயல் வகைகள், குரங்குகள், கீரிப்பிள்ளை மற்றும் பாம்புகள் உள்ளிட்ட  பலவகை விலங்குகளும் மயில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பறவை இனங்களும்  வாழ்ந்து வருகின்றன.

கழுகுமலை வெட்டுவான் கோயில்

கழுகுமலை வெட்டுவான் கோயில் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை என்னும் பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில் ஆகும். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில், அமைந்துள்ள கழுகுமலையில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திராவிடக் கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்டு சுமார் கி.பி. 800-ல் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக்கோயில்களில் ஒன்றான கழுகுமலை வெட்டுவான் கோயில் ஒரே கல்லில் ஆனதாகும். ஒரு பெரிய கருங்கல்லைக் குடைந்து இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. செந்நிற பாறைகளால் ஆன கழுகு மலையின் கிழக்கில் அமைந்துள்ள வெட்டுவான் கோயில் எல்லோராவில் உள்ள கைலாச நாதர் கோயிலைப் போன்றது. இது பெரிய மலைப்பாறையின் கீழ் நோக்கி செங்குத்தாக ஏறக்குறைய 7.05 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக குடைந்தெடுத்து அதன் நடுப்பகுதியை கோயிலாக செதுக்கியுள்ளனர். மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலில்  தற்போது கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல், கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.  கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் எளிதில் கண்ணுக்குத் தெரியாத வண்ணம் அமைந்துள்ளது. சற்றே தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் இறங்கியே இக்கோயிலுக்குச் செல்ல முடியும். ஒரு சிறிய கோயிலில் கருவறையுடன் கூடிய விமானம் எவ்வாறு அமையுமோ அந்த அளவு இக்கோயில் காணப்படுகிறது. இங்கு உயிரோட்டம் உள்ள பிரம்மா, திருமால், சிவன், தேவகன்னியர் மற்றும் பூத கணங்களின் சிலைகளும், முழுமை பெறாமல் உள்ள சிற்பங்களும் காணப்படுகின்றன.

ஜெயின் சிற்பங்கள் – கழுகுமலை

சமண சிற்பங்கள் அடங்கியுள்ள கழுகுமலை சமணர் படுகைகள் கழுகுமலையில் வெட்டுவான் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இச்சமணர் படுகைகள் கோவில்பட்டிலிருந்து 22 கீமீ தொலைவில் கழுகுமலை பேரூராட்சியில் உள்ளது. இச்சமணக் கல் படுக்கைகள் குடைவரை கட்டிட அமைப்பில், பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (கிபி 768-800) அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இங்கு திகம்பர சமணத் துறவிகள் தங்கி, சமண சமயத்தை பரப்பினர். 1000 ஆண்டுகளை கடந்து நிற்கும் இந்த சிற்பங்கள் பண்டைய தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக விளங்குகின்றது.

இச்சமணப் படுக்கைகளுக்கு அருகில் கிபி 8ம் நூற்றாண்டின் சிவன் கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் மற்றும் கழுகுமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இச்சமண படுகைகளில் மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற 150 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கழுகுமலை சமணர் படுகைகள், தமிழகத் தொல்லியல் துறை பராமரிக்கிறது.

மயில் தோட்டம் – ஓட்டப்பிடாரம்

தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் பகுதியில் அமைந்துள்ளது இந்த ‘மயூரா தோட்டம்’ என்று அழைக்கப்படுகிற மயில் தோட்டம். ‘மயூரா’என்றால் சம்ஸ்கிருத மொழியில் மயில் என்று பொருள். கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசப் தாரகன் என்பவருக்கு சொந்தமான இந்த தோட்டம் சுமார் 58 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இது தூத்துக்குடியில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தோட்டம் 500 க்கும் மேற்பட்ட மயில்களின் புகலிடமாக மாறியிருக்கிறது. இதில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் ஏராளமான கொய்யா, மா மற்றும் சப்போட்டா மரங்களும் மயில்கள் வாழ்வதற்கான இயற்கையான சூழலை உறுதி செய்கின்றன.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெண் மயில்களை கவரும் விதமாக ஆண் மயில்கள் தோகை விரித்தாடும் காட்சி அற்புதமாக இருக்கும்.  இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஒட்டப்பிடாரத்தில் தேசிய பறவையான மயிலுக்கு தனியொரு தோட்டம் அமைந்திருப்பது இந்த நகருக்கு மேலும் ஒரு பெருமையை உருவாக்கி இருக்கிறது. பறவை விரும்பிகளுக்கு இந்த இடம் மறக்க முடியாத அனுபவத்தை தரக்கூடியதாகும். ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதை ஒட்டி இங்கேயே 50 பேர் வரை தங்குவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

பனிமய மாதா தேவாலயம்

தூத்துக்குடி நகரின் கடற்கரை ஒரத்தில் அமைந்துள்ள பணிமயமாதா ஆலயம் கிறிஸ்தவர்களின் பிரசித்தப் பெற்ற வழிப்பாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயம் கி.பி. 1711 ம் ஆண்டு   போர்த்துகிசியர்காளால் நிர்மாணிக்கப்பட்டது. பனிமய மாதா பேராலயம் (Lady of Snows basilica) தூத்துக்குடியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் பேராலயமாகும்.  1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இத்திருத்தலத்தைப் பேராலயமாக  உயர்த்தினார்.ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பனிமயமாதா திருவிழா கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

மஹாகவி பாரதியார் மணிமண்டபம் – எட்டயபுரம்

ஆங்கிலேயர் காலத்தில் தமிழக மக்களிடையே விடுதலை வேட்கையை வளர்க்க எழுச்சிமிகு கவிதைகளை படைத்தவரும் தான் எழுதிய நூல்களின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு இணையில்லா பங்களிப்பை அளித்தவரும் ஆன புரட்சி கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊர் எட்டையபுரம் ஆகும். இது திருநெல்வேலியிலிருந்து 76 கி.மீட்டரிலும் கோவில்பட்டியிலிருந்து 35 கி.மீட்டரிலும் அமைந்துள்ளது. அவர் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக தமிழக அரசால் மாற்றப்பட்டுள்ளது. தமிழ் புலவரான உமறுபுலவரின் தான்ஷா இதே ஊரை சேர்ந்தவர் ஆவார். இங்கிருந்து மிக அருகிலான தூத்துக்குடி இரயில் நிலையம் 25 கிமீ தொலைவிலும், தூத்துக்குடி விமான நிலையம் 35  கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை – பாஞ்சாலங்குறிச்சி

பாஞ்சாலங்குறிச்சி என்னும் சிறிய மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க கிராமம் தூத்துக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் திருநெல்வேலியிருந்து 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரில் பிறந்து இன்றளவும் தமிழக மக்களால் போற்றப்படும்   வீரபாண்டியக்கட்டபொம்மன் கி.பி. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசை எதிர்த்து குரல் எழுப்பினார். வீரப்பாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவுச் சின்னம் 1974ல் தமிழக அரசால் கட்டப்பட்டது. நினைவுச்சின்னம் கட்டிடத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வீர தீரங்களையும் அவர்கால வரலாற்று சான்றுகளையும் வெளிப்படுத்தும் முகமாய் அமைந்துள்ளன. கோட்டைக்குள் ஸ்ரீதேவி சக்கம்மாள் கோவில் அமைந்துள்ளது. கோட்டையின் அருகே போரில் மரணம் அடைந்த ஆங்கிலேய போர் விரர்களை புதைக்கப்பட்ட இடம் உள்ளது. கோட்டையின் எஞ்சியப் பகுதிகள் தமிழக  தொல்லியில் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்திற்கு சென்று வர தூத்துக்குடியிலிருந்து நகர பேருந்து வசதிகள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி 15  மற்றும் மே மாதம் இரண்டாம் மாதங்களில் கட்டபொம்மன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இவ்விழாவை சிறப்பிக்கின்றனர். திருவிழாவின் பொது நடைபெறும் மாட்டுவண்டி பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவரும் அம்சமாகும். சுற்றுலா பயணிகள் இந்த கோட்டையை பார்வையிடுவதற்கான நேரம் காலை 8  மணி முதல் மாலை 6 மணி வரை. சுற்றுலா பயணிகள் ஓய்வெடுப்பதற்கான விடுதிகள் இங்கிருந்து மிக அருகிலேயே அமைந்திருக்கின்றன.

உப்பளம் – தூத்துக்குடி

தூத்துக்குடியின் முக்கிய தொழில்களில் ஒன்று உப்பு தயாரித்தலாகும். தமிழ்நாடு கடற்கரையை ஒட்டிய மாநிலமாக இருப்பதால் தமிழர்கள் உப்புத் தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கிறது தூத்துக்குடி. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 60 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்கள்.உப்பள தொழிலானது  பராமரிப்பு பணியின் போது காலை 6 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை நடக்கும். இதுவே உப்பு வாறும் பணியின் போது அதிகாலை 2 மணிக்கே தொடங்கி காலை 9 மணி வரை வேலை நடைபெறும். உப்பளங்களில் சூரிய ஒளியில் வேலை செய்ய முடியாது என்பதால் அதிகாலையிலேயே சென்று வேலை செய்கின்றனர். மழைக்காலங்களில் உப்பளத்தில் எந்த ஒரு பணியும் நடை பெறாது.

Leave a Reply