விருதுநகர் அய்யனார் அருவி மற்றும் கோவில் சுற்றுலா

அய்யனார் அருவி

அய்யனார் அருவி சுற்றுலா விருதுநகர்
அய்யனார் அருவி சுற்றுலா விருதுநகர்

அய்யனார் அருவி சுற்றுலா விருதுநகர்

அய்யனார் அருவியானது  தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரில் இருந்து 10 கிமீ (6.2 மைல்) மேற்கே அமைந்துள்ளது. இது இராஜபாளையத்தை சுற்றியுள்ள மக்களின்  முக்கிய சுற்றுலா தலமாக திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியை சுற்றியுள்ள மலைகள் மலையேற்றத்திற்கான நல்ல இடமாக திகழ்கிறது.  அருவிக்கு போகும் வழியில் உள்ள அணை இராஜபாளையம் நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவுசெய்கிறது.

 

இந்த அருவியைச் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியானது வன விலங்குகள் மற்றும் பறவைகள்  ஒளிப்படக் கலைஞர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் உள்ளது.  இங்கு காட்டு அய்யனார் கோவில் இருக்கும் காரணத்தினால் தான் இந்த அருவியானது அய்யனார் அருவி என்று பெயர் பெற்றது. இதுவே இங்கு வாழும் காட்டு விலங்குகளான குரங்குகள், யானைகள், மான்கள், காட்டெருமைகள் ஆகியவற்றுக்கும்  நீராதாரமாக விளங்குகிறது.

அய்யனார் கோவில்

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள  பழையாறு மற்றும் நீராறு ஆகிய இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில தான் காட்டு அய்யனார் கோயில் அமைந்துள்ளது. அய்யனார் அருவி என்ற பெயர் வர காரணமான இந்தக் கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு ஆற்றங்கரையில் அருளாட்சி செய்து கொண்டிருக்கும் நீர் காத்த அய்யனாரின் வலது புறம் பூர்ணா தேவி மற்றும் இடது புறம் புஷ்கலா தேவி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். பழங்காலத்தில் இருந்தே தமிழக மக்கள் வணங்கி வரும் காவல் தெய்வங்களுள் மிகச் சிறப்பு வாய்ந்தது அய்யனார் ஆகும். ஊர் மக்களை தீய சக்திகளில் இருந்து காக்க அய்யனார் இரவு முழுவதும் குதிரை மீது சவாரி செல்வார் என்பது மக்களின் நம்பிக்கை. அய்யனார் பல ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படுகிறார். அய்யனாரை ஐயனார் என்றும் குறிப்பிடுவது வழக்கம். ‘ஐ’ என்றால் தலைமை, அழகு, வியப்பு, அரசன், கடவுள், தந்தை என பல பொருள்படும்.

பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து தங்களின்  பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அய்யனாரை அணுகி வணங்குகின்றனர். அய்யனாருக்கு அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு அன்னதானமும்  அளிக்கின்றனர். மழைக்காலங்களில் ஏற்படும் திடீர் வெள்ளத்தால் அய்யனார் கோவிலுக்கு வருகை தரும் மக்கள் கோவிலுக்குள் மாட்டிக் கொள்கின்றனர். அது போன்ற சமயங்களில் இராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் வந்து மக்களை மீட்டு ஆற்றை கடக்க உதவி செய்கின்றனர். இதனால் தான் பெரு மழைக்காலங்களில் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.

ஆறாவது மைல் அணை

அய்யனார் அருவிக்கு செல்லும் வழியில் ஆறாவது மைல் அணை என்று அழைக்கப்படும் ஒரு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணையானது  இராஜபாளையம் நகரில் இருந்து ஆறு மைல்  தொலைவில் உள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த நீர்தேக்கத்தின் முதன்மையான  நீர் ஆதாரமாக அய்யனார் அருவி உள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் நீர் ராஜபாளையம் நகரைச் சுற்றியுள்ள கிராம்ப் பகுதியின் பாசனத் தேவைக்கும், ராஜபாளையத்தில் வாழும் மக்களின் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இது ஒரு முக்கிய சுற்றுலா மையமாகவும் உள்ளது. இந்த நீர்தேக்கத்தில் ஒரு நீர்சுத்திகரிப்பு நிலையமும் அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியில் சில திரைப்படங்களும் படமாக்கப்பட்டுள்ளது.

அய்யனார் அருவிக்கு அருகில் உள்ள வானூர்தி நிலையம் மதுரை வானூர்தி நிலையமாகும். அய்யனார் அருவியைப் போன்ற பல அருவிகள் தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ளன. அய்யனார் அருவியைச் சுற்றி உள்ள  மற்ற சுற்றுலாத்தளங்களாக அய்யனார் கோவில், அருவி அருகே உள்ள அணை, ஸ்ரீவில்லிபுத்தூர், அய்யனார் கோயில் வனப் பகுதி, ஸ்ரீவல்லக்காட்டு கருப்பசாமி கோவில், சஞ்சீவி மலை, சென்பகத்தோப்பு நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம் போன்றவை உள்ளன. அய்யனார் அருவியை ஒட்டி வாழும் மக்களின் வாழ்க்கைக்கு இங்கு நடைபெறும் சுற்றுலா உதவிகரமாக உள்ளது.

 

சுற்றுலா பயணிகள் வந்து தங்குவதற்காண  ஹோட்டல் வசதி இராஜபாளையம் நகரில் உள்ளது. அய்யனார் அருவிக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் மதுரை ஆகும். குறைந்த கட்டணம் முதல் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த ஹோட்டல்களை புக் செய்து கொண்டு உங்கள் விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க அய்யனார் அருவி சிறந்த தேர்வாக இருக்கும்.

Leave a Reply