
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தமிழ் நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழம்பெரும் கோவிலாகும். இது ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமாகும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இது இந்து மத வைணவ கோவிலாகும். மதுரையில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோவில் திராவிட கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் ஆணி ஆழ்வார் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். இது மட்டும் இல்லாது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் திருவாடிப்பூரமும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும் எண்ணெய்க்காப்பு விழாவும் மிகவும் புகழ்பெற்ற திருவிழாக்கள் ஆகும்.
மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது. தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் இருக்கும் கோவில் கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரமே ஆகும். தமிழ் நாட்டின் மிக முக்கிய கோவில்களில் ஒன்றான இந்த கோவில் ஆன்மீக சுற்றுலா பட்டியலில் தவறாமல் இடம் பெரும் கோவிலாகும்.
அய்யனார் அருவி சுற்றுலா தளம்
அய்யனார் அருவியானது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரில் இருந்து 10 கிமீ (6.2 மைல்) மேற்கே அமைந்துள்ளது. இது இராஜபாளையத்தை சுற்றியுள்ள மக்களின் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியை சுற்றியுள்ள மலைகள் மலையேற்றத்திற்கான நல்ல இடமாக திகழ்கிறது. அருவிக்கு போகும் வழியில் உள்ள அணை இராஜபாளையம் நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவுசெய்கிறது.
இந்த அருவியைச் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியானது வன விலங்குகள் மற்றும் பறவைகள் ஒளிப்படக் கலைஞர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் உள்ளது. இங்கு காட்டு அய்யனார் கோவில் இருக்கும் காரணத்தினால் தான் இந்த அருவியானது அய்யனார் அருவி என்று பெயர் பெற்றது. இதுவே இங்கு வாழும் காட்டு விலங்குகளான குரங்குகள், யானைகள், மான்கள், காட்டெருமைகள் ஆகியவற்றுக்கும் நீராதாரமாக விளங்குகிறது.
அய்யனார் அருவிக்கு அருகில் உள்ள வானூர்தி நிலையம் மதுரை வானூர்தி நிலையமாகும். அய்யனார் அருவியைப் போன்ற பல அருவிகள் தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ளன. அய்யனார் அருவியைச் சுற்றி உள்ள மற்ற சுற்றுலாத்தளங்களாக அய்யனார் கோவில், அருவி அருகே உள்ள அணை, ஸ்ரீவில்லிபுத்தூர், அய்யனார் கோயில் வனப் பகுதி, ஸ்ரீவல்லக்காட்டு கருப்பசாமி கோவில், சஞ்சீவி மலை, சென்பகத்தோப்பு நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம் போன்றவை உள்ளன. அய்யனார் அருவியை ஒட்டி வாழும் மக்களின் வாழ்க்கைக்கு இங்கு நடைபெறும் சுற்றுலா உதவிகரமாக உள்ளது.
சுற்றுலா பயணிகள் வந்து தங்குவதற்காண ஹோட்டல் வசதி இராஜபாளையம் நகரில் உள்ளது. அய்யனார் அருவிக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் மதுரை ஆகும். குறைந்த கட்டணம் முதல் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த ஹோட்டல்களை புக் செய்து கொண்டு உங்கள் விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க அய்யனார் அருவி சிறந்த தேர்வாக இருக்கும்.
இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் இருக்கன்குடி மாரியம்மன். இந்த இரண்டு ஆறுகளிலும் நீராடி, முழுமனதுடன் அம்மனை தரிசித்து வழிபடுவதால், நம் அனைத்து வினைகளும் தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதிகாசப் பெருமை கொண்ட இந்தத் தலத்தில் அம்மன் கோயில் கொண்டதன் பின்னணியில் சித்தர் ஒருவரின் தவம் அமைந்திருக்கிறது. மதுரைக்கு அருகில் உள்ள சதுரகிரி என்னும் மலையில் சித்தர் ஒருவர் அம்பிகையை தரிசிக்க விரும்பித் தவம் இருந்தார். அப்போது அம்பிகை அசரீரியாக அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாற்றுக்கு நடுவில் இருக்கும் மேட்டுப் பகுதிக்கு வரும்படி அருள்மொழி கூறினாள். அதன்படியே இப்பகுதிக்கு வந்த சித்தருக்கு அம்பிகை தரிசனம் தந்தாள். தனக்கு அம்பிகை தரிசனம் தந்த கோலத்திலேயே ஒரு விக்கிரகம் வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் அம்மனின் சிலை ஆற்று மண்ணில் புதைந்து போனது. பிற்காலத்தில் பசுமாட்டின் சாணம் சேகரிக்கும் ஒரு சிறுமியின் மூலம் அம்மன் வெளிப்பட்டு, கலியின் துன்பங்கள் தீர கோயில் கொண்டாள் மாரியம்மன்.
மாரியம்மன் இங்கே சிவ அம்சமாகத் திகழ்வதால், அம்மன் சந்நிதிக்கு எதிரில் நந்தி இருக்கிறது. இப்போது கோயில் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தொலைவில் அம்பாள் சிறுமிக்குக் காட்சி கொடுத்த இடத்தில் ஆதி அம்பாள் சந்நிதி உள்ளது. இங்கே அம்மனின் திருவுருவத்துக்கு பதில், அம்பிகையின் திருவடிவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. உற்சவ அம்மன் ஊருக்குள் இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே உற்சவ அம்மன் பிரதான கோயிலுக்கு எழுந்தருளுகிறாள்.
வழக்கமாக இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் அம்மன் இங்கே வலக் காலை மடித்து, இடக் காலை தொங்கவிட்டபடி சுகாசன திருக்கோலத்தில் காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்.
குழந்தை இல்லாதவர்கள் இந்த அம்மனின் சந்நிதிக்கு வந்து வேண்டிக்கொண்டபின் குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் செய்து, அதில் குழந்தையைப் படுக்க வைத்து அம்மனின் சந்நிதியை வலம் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் அக்னிச் சட்டி எடுத்தல், அங்கபிரதட்சிணம் செய்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். கண்கள் தொடர்பான நோய் உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோயில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
கோயில் காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 5.30 முதல் இரவு 8.30 வரை தொடர்ந்து திறந்திருக்கும்.
குகன் பாறைகள் :
குகன் பாறையானது வெம்பக்கோட்டையில் இருந்து கழுகு மலைக்கு செல்லும் வழியில் இருக்கிறது. இது இளையராம்பண்ணை கிராமத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த பாறைகளின் அடித்தளத்தில் அமைந்துள்ள குகையில் ஜைன மதத்தை சேர்ந்த துறவிகள் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. தீர்த்தங்கரர் என்ற துறவியின் சிதிலமடைந்த பாறை ஓவியமும், கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை மலையேற்ற விரும்பிகளுக்கு இந்த இடம் சரியான தேர்வாக இருக்கும். இந்த இடம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து 22 கிமீ தொலைவிலும் மதுரையில் இருந்து 80 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.
பிளவுக்கல் அணை :
பிளவுக்கல் அணையானது தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது மதுரையில் இருந்து 90 கிமீ தொலைவிலும், விருதுநகரில் இருந்து 45 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த அணை கோவிலாறு மற்றும் பெரியாறு என்ற இரு பிரிவுகளை கொண்டது. இதில் கோவிலாறு 133 மில்லியன் கன அடி கொள்ளளவும், பெரியாறு 192 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான இந்த அணையில் சிறுவர் பூங்காவும் அமைந்துள்ளது. மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இந்த அணையானது இயற்கை விரும்பிகளை பெரிதும் ஈர்ப்பதாக உள்ளது.
செண்பகத்தோப்பு சாம்பல் நிற அணில் மற்றும் வனவிலங்கு சரணாலயம்

தென்னிந்தியாவின் தமிழ் நாட்டில் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. 485 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம் பெரியார் புலிகள் காப்பகத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. சுமார் 1800 மீட்டர் உயரம் கொண்ட மலைகள் அடங்கிய இந்த சரணாலயத்தில் பெரியாறு பச்சையாறு உள்ளிட்ட ஆறுகள் அமைந்துள்ளன. இங்கு வெப்பநிலை வெயில் காலங்களில் 27 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதுவே குளிர் காலங்களில் 20 முதல் 30 டிகிரி செல்சியஸ்வரை இருக்கும்.
இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel) புகலிடமாகத் திகழ்கிறது.இந்த சாம்பல்நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை அளவில் இருக்கும். இதன் நீளம் 735 மி.மீ. (மில்லிமீட்டர்), மூக்கில் இருந்து 400 மி.மீ.(மில்லிமீட்டர்) முதல் 360 மி.மீ.(மில்லிமீட்டர்) வால் வரை நீளம் இருக்கும். இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களின் உச்சியிலுள்ள சந்திக்கும் கிளைகளில் தமது கூட்டை கட்டும். இம்மாதிரி உயர்ந்த கிளைகளில் கூடு கட்டுவது, தான் ஏதேனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது மரம் விட்டு மரத்தில் தாவி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சாம்பல் நிற அணில் தப்பிக்க வழிவகை செய்கிறது. இந்த வகை அணில்கள் மட்டுமில்லாது இன்னும் பல வகை அணில்களும் மான்கள், காட்டு பூனைகள், சில வகை கரடிகள் மற்றும் யானைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக இந்த சரணாலயம் திகழ்கிறது.
இந்த சரணாலயம் மதுரையில் இருந்து 79 கிமீ தொலைவிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து 320 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கிருந்து மிக அருகிலான இரயில் நிலையம் விருதுநகரிலும் விமான நிலையம் மதுரையிலும் உள்ளது.